மே.வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் முட்டை நீக்கம்: திரிணாமுல் காங்கிரஸ் கணடனம்

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் சைவ உணவு கலாச்சாரத்தை திணிக்க பாஜ முயற்சிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மேற்குவங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த மேற்குவங்க நிதியமைச்சர் ஸ்வபன் தாஸ் குப்தா, “இனி பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின்கீழ் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இஸ்கான் அமைப்பு உதவும்” என தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் முட்டை நீக்கப்பட்டு, காய்கறி உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என தகவல்கள் வௌியாகி அரசியல் ரீதியாக சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இணை செயலாளர் டெரைக் ஓ. பிரையன் தன் எக்ஸ் பதிவில், “மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தின்போது மீன் சாப்பிட்ட நாடகத்துக்கு பிறகு, குஜராத் ஜிம்கானா இப்போது தனது உண்மையான முகத்தை காட்டுகிறது. மேற்குவங்கத்தில் புதிய பாஜ அரசு செயல்பட தொடங்கி உள்ளது.

முட்டைகள் எதிராளிகளுக்கு எதிரான ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படும் அதேவேளையில், பள்ளி மதிய உணவில் குழந்தைகளுக்கு முட்டைகள் மறுக்கப்படுகிறது. எதிராளிகள் மீது முட்டைகளை வீசுங்கள், ஆனால், மதிய உணவில் இருந்து முட்டைகளை நீக்கி, குழந்தைகளுக்கு ஏன் ஊட்டச்சத்தை மறுக்கிறீர்கள்? சைவ உணவு கலாச்சாரத்தை ஏன் திணிக்கிறீர்கள்? இதை திரிணாமுல் காங்கிரஸ் நிராகரிக்கிறது, கண்டிக்கிறது” என விமர்சனங்களுடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: