கொச்சியில் அரை கி.மீ தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் மாயம்: மத்திய போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகம், சிமெண்ட் ஆலைகள் உள்பட பெரிய நிறுவனங்களுக்கு ரயிலில் எளிதாக சரக்குகள் கொண்டு செல்வதற்காக அவர்களுடைய இடத்திற்குள் தண்டவாளம் போடப்பட்டிருக்கும். தண்டவாளம் இருக்கும் பகுதி கேட் போட்டு மூடப்பட்டிருக்கும். ரயில் வரும்போது மட்டும் தான் அந்த கேட் திறக்கப்படும். இதேபோலத் தான் கொச்சியில் உள்ள துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு வருவதற்கும், கொண்டு செல்வதற்கும் சுமார் 2 கிமீ தூரத்திற்கு தண்டவாளம் போடப்பட்டிருந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன் இங்கு வல்லார்பாடம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்ததால் கொச்சி துறைமுகத்திற்கு ரயிலில் சரக்குகள் வருவது நிறுத்தப்பட்டது. இதனால் துறைமுகத்திற்கான ரயில் போக்குவரத்தும் நின்றது. ரயில்கள் வராததால் துறைமுகத்தின் எல்லைக்குள் இருந்த ரயில்வே தண்டவாளம் முழுவதும் புதர்களால் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று இங்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிறிது தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தீவிர சோதனையில் சுமார் அரை கிமீ தூரத்திற்கு தண்டவாளம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: