மும்பை: கிரெடிட் கார்டு மூலம் மோசடியான மின்னணு வங்கி பரிவர்த்தனைகள் புகார் எழுந்தால், வாடிக்கையாளர் தகவல் தெரிவித்த தேதியிலிருந்து 5 நாட்களுக்குள் இழந்த தொகையை தற்காலிக வரவாக வங்கி வழங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களின் பொறுப்பு வரம்பை நிர்ணயிப்பதற்கான திருத்தப்பட்ட விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில், மின்னணு வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் வகையில் வங்கிகள் தங்கள் சேவை மற்றும் அமைப்புகளை வடிவமைக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தகுந்த பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன. ரூ.500க்கு மேற்பட்ட மதிப்புள்ள அனைத்து மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்திகளை அனுப்ப வேண்டும்.
அதில் செய்தி அனுப்பப்பட்ட தேதி, நேரம், வாடிக்கையாளரிடமிருந்து பதில் பெறப்பட்டால் அதற்கான நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். மோசடியான மின்னணு வங்கி பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் பெறப்பட்டால், அந்த வாடிக்கையாளரின் கணக்கிலும் மேலும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடைபெறுவதை தடுக்க வங்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கியின் அலட்சியம், குறைபாடு காரணமாக மோசடியான பரிவர்த்தனை நடந்தால், வாடிக்கையாளர் அப்பரிவர்த்தனை குறித்து புகார் தெரிவித்தாலும் இல்லாவிட்டாலும் அதை பொருட்படுத்தாமல் அவருக்கு பரிவர்த்தனை தொகையை முழுமையாக திரும்ப பெறும் உரிமை உண்டு. மூன்றாம் தரப்பு மூலம் மோசடி நடந்தால் அந்த பரிவர்த்தனை நடந்த தேதியிலிருந்து 5 நாட்களுக்குள் வாடிக்கையாளர் வங்கிக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அவருக்கும் பரிவர்த்தனை தொகையை திரும்ப பெறும் உரிமை உண்டு.
கிரெடிட் கார்டுகள் மூலம் நடைபெறும் மோசடியான மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளின் போது, வாடிக்கையாளர் புகார் தெரிவித்த 5 நாட்களுக்குள் மோசடி பரிவர்த்தனைக்கு இணையான தொகையை வங்கி தற்காலிக வரவாக வாடிக்கையாளர் கணக்கில் திரும்ப சேர்க்க வேண்டும். இதன் மூலம் வட்டி, தாமத கட்டணம் விதிப்பது தடுக்கப்படும் என திருத்தப்பட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட விதி 2027 ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வருகிறது.
