புதுடெல்லி: எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டால் வாகன காப்பீடுகளின் செல்லுபடித்தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது என ஒன்றிய எண்ணெய் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் வழக்கமான பெட்ரோலுடன் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை 20 சதவீதம் கலந்து இ20 பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் இயந்திரங்கள் விரைவில் பழுதடையும் என்றும், இ20 பெட்ரோல் பெட்ரோல் பயன்படுத்தினால் அதற்கு வழக்கமான வாகன காப்பீடு பொருந்தாது என்றும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஒன்றிய எண்ணெய் அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: எத்தனால் கலப்பு என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. பிரேசிலில் இ27 பெட்ரோல் கலவை செயல்படுத்தப்படுகிறது.
இதே போல இந்தியாவின் எத்தனால் கலப்பு திட்டமும் பாதுகாப்பானது. இந்தியாவில் எத்தனால் கலப்பு திட்டம் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நிய செலாவணி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. எத்தனால் பயன்பாட்டால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு, கிராமப்புற பொருளாதாரத்தையும் வலுப்படுத்தி உள்ளது.
இ20 பெட்ரோல் பயன்பாடு எந்த வகையிலும் வாகன காப்பீடு செல்லுபடியாகும் தன்மையை பாதிக்காது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், கார்பன் உமிழ்வை குறைப்பதிலும், தூய்மையான போக்குவரத்தை நோக்கிய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் எத்தனால் கலவை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
