புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்) ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கட்சி மாறிய விவகாரம் தொடர்பாக மழைக்கால கூட்ட தொடருக்கு முன்னதாக சபாநாயகர் முடிவு எடுப்பார் என வட்டாரங்கள் தெரிவித்தன.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்பிக்கள் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளனர். அவர்கள் இந்திய தேசிய குடிமக்கள் கட்சி என்ற பிரபலமில்லாத கட்சியில் சேர்ந்துள்ளனர். அதே போல் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளனர்.
இதனால் கட்சி மாறிய எம்பிக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகரிடம் திரிணாமுல் மற்றும் சிவசேனா(உத்தவ்) ஆகிய கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
