திருவனந்தபுரம்: கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரள வரலாற்றில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் பாஜ 50 வார்டுகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 51 கவுன்சிலர்கள் தேவை என்பதால் ஒரு சுயேட்சை கவுன்சிலரின் ஆதரவுடன் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. தொடர்ந்து மேயராக வி.வி. ராஜேஷ் பொறுப்பேற்றார்.
கேரள உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி கவுன்சிலர்கள் கடவுளின் பெயரால் அல்லது உளமார என்று கூறித்தான் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் சில பாஜ கவுன்சிலர்கள் பாரதமாதா, பத்மநாபசுவாமி, சபரிமலை ஐயப்பன், ஆற்றுகால் தேவி என பல்வேறு தெய்வங்களின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
துணை மேயர் ஆஷா நாத் பாரத மாதாவின் பெயரில் சத்தியப் பிரமாணம் செய்தார். இது உள்ளாட்சி அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால் இவ்வாறு பதவியேற்ற 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப் பிரமாணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி சிபிஎம் கவுன்சிலர் தீபக் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை நேற்று பரிசீலித்த நீதிபதி குஞ்சி கிருஷ்ணன், தெய்வங்களின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்த 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இது தவிர பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரி பஞ்சாயத்தில் 21வது வார்டு உறுப்பினரான சுனில், கேரள முன்னாள் முதல்வர் மறைந்த உம்மன் சாண்டியின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்தார். அவரது பதவிப் பிரமாணத்தையும் கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
* உடனடியாக மீண்டும் பதவிப்பிரமாணம்
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் நேற்று மாலையே துணை சபாநாயகர் ஆஷா நாத் உள்பட பாஜவின் 19 கவுன்சிலர்கள் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மேயர் வி.வி. ராஜேஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுகதன் என்ற ஒரு பாஜ கவுன்சிலர் அடிதடி வழக்கில் சிறையில் இருப்பதால் அவர் மட்டும் நேற்று பதவிப்பிரமாணம் செய்யவில்லை.
