அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தராகவும், உத்தரவாதம் அளிக்கும் நபராகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கையெழுத்திட்டார் . பாகிஸ்தான் பிரதமர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோரின் கையொப்பங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், முதல் படியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்கும், இதற்குபதிலாக ஈரானின் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா உடனடியாக நீக்கும் என்று ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணிக்கும், ஈரானுக்கும் இடையே 100 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த போர், இந்த ஒப்பந்தத்தின் மூலம் உடனடியாகவும், நிரந்தரமாகவும் முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஈரான் மீது கூட்டுத்தாக்குதலை தொடங்கின. இந்த கூட்டுத் தாக்குதலில் முதல் நாளிலேயே 86 வயதான ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முக்கிய ராணுவத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர். 3 மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்தப்போரில் ஈரான் மற்றும் லெபனானில் 7,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், நாடு முழுவதும் எரிபொருள் விலைகள் உயர்ந்தன; பணவீக்க அழுத்தங்கள் மீண்டும் அதிகரித்தன. உலகம் முழுவதும் இந்த மத்திய கிழக்குப் போர் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஈரான் முன்மொழிந்த 14 அம்சங்களை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
