ஆன்லைன் மெசேஜிங் செயலி மூலம் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் மகனிடம் ரூ.7.8 கோடி மோசடி

புதுடெல்லி: இந்தியாவின் 12வது பிரதமராக 1997ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஐ.கே. குஜ்ரால். இவரது மகன் நரேஷ் குஜ்ரால்(78). சிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த நரேஷ் குஜ்ரால், 2007ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் நரேஷ் குஜ்ரால் நடத்தி வரும் நிறுவனத்தின் நிதிப்பிரிவு ஊழியர்களை ஆன்லைன் மெசேஜிங் செயலி மூலம் ஏமாற்றி ரூ.7.8 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 12, 16 ஆகிய தேதிகளுக்குள்பட்ட நாளில், மோசடி கும்பல் ஒன்று நரேஷ் குஜ்ரால் போல் தோற்றம் தரும் ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைன் மெசேஜிங் செயலியில் ஒரு கணக்கை உருவாக்கி உள்ளனர். பின்னர், அவசரமான வணிக தேவை என கூறி, குறிப்பிட்ட வங்கி கணக்கு ஒன்றுக்கு ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் மூலம் பணத்தை அனுப்புமாறு நரேஷ் குஜ்ரால் நிறுவன நிதிப்பிரிவு ஊழியர் ஒருவருக்கு மோசடி கும்பல் செய்தி அனுப்பி உள்ளது. இதை உண்மை என நம்பிய ஊழியர் ரூ.7.8 கோடி அனுப்பி உள்ளார். ஜூன் 16ம் தேதிஇந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இதுபற்றி டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ரூ.4 கோடி(70%) பணத்தை முடக்கி விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்றார்.

Related Stories: