கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் 2வது மகன் நேற்று கைது செய்யப்பட்டார். இலங்கையில் தற்போது அதிபர் அனுர குமார திசா நாயக தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த சூழலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் 2வது மகனான யோஷித ராஜபக்சே ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஊழல் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி விசாரணைக்கு ஆஜரான யோஷித ராஜபக்சேவை ஊழல் விசாரணை ஆணையம் அதிரடியாக கைது செய்தது.
இதுதொடர்பாக இலங்கை ஊழல் விசாரணை ஆணையம் வௌியிட்ட அறிக்கையில், “யோஷிதா ராஜபக்சே இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரியாக கடந்த 2006ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை நிறைவு செய்யாமல், இலங்கை கடற்படை நிர்வாக பிரிவு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.
மேலும், வழக்கமான பணி நியமன மற்றும் பயிற்சி நடைமுறைகளுக்கு புறம்பாக, அரசாங்க நிதியை பயன்படுத்தி பிரிட்டனில் உள்ள ராயல் கடற்படை கல்லூரியில் பயிற்சி பெற யோஷித ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
