மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் தென்கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நேற்று முன்தினம் நள்ளிரவு உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. ஒரேவாரத்தில் 2வது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா படையெடுக்க தொடங்கிய 4 ஆண்டுகளில் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இது என கூறப்படுகிறது.
இதுகுறித்து மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், “ஒரே இரவில் பல பகுதிகளில் ஏவப்பட்ட உக்ரைனின் 555 டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. அதில் 200 டிரோன்கள் தலைநகர் மாஸ்கோவை நெருங்கும்போது சுட்டு வீழ்த்தப்பட்டன” என்றார். இந்த டிரோன் தாக்குதல்களால் மாஸ்கோவின் நான்கு விமான நிலையங்களில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
