குன்னூர், ஜூன் 16: நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் பொதுமக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மினி பேருந்துகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, குன்னூர் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் தினசரி பயணத்திற்கு இந்த பேருந்துகளே பிரதானமாக உள்ளன. இந்நிலையில், குன்னூரில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படும் சில மினி பேருந்துகள், பயணிகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் வகையிலும், அத்துமீறல்களின் புகலிடமாகவும் மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீப நாட்களாக குன்னூர் பகுதியில் இயக்கப்படும் சில மினி பேருந்துகளில் அடுக்கடுக்கான விதிமீறல்கள் அரங்கேறி வருவதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அனுபவம் இல்லாத சிறார்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளைவுகள் நிறைந்த ஆபத்தான மலைப்பாதைகளில், ஓட்டுநர்கள் மது போதையில் அதிவேகமாக பேருந்துகளை இயக்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. பணியின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமங்கள் இல்லாமலும், முறையான சீருடை அணியாமலும் பலர் பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களுக்கு பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், பேருந்தின் உள்ளே காதை பிளக்கும் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்து இயக்குவதோடு, பயணிகளிடம் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கனிவாக நடந்து கொள்ளாமல், மிகவும் மரியாதை குறைவாகவும் ஒருமையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வண்டிச்சோலை வழித்தடத்தில் தனியார் மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய சில மினி பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கிண்டல் செய்தும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வருவதாகத் தெரிகிறது. இந்த அநாகரிகமான சம்பவங்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மத்தியில் முகம் சுழிப்பையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
