மஞ்சூர்,ஜூன் 16: மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் ருக்மணி தலைமை தாங்கினார். தனிப்பிரிவு எஸ்.ஐ அப்பாஸ் வரவேற்றார். இதில் மஞ்சூர் பகுதியை சேர்ந்த மருந்து கடை உரிமையாளர்கள், கொரியர் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி, குறிப்பிட்ட நிவாரணி மாத்திரைகள், துாக்க மாத்திரை போன்ற மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. மேலும் கொரியர் நிறுவனங்கள் தங்களுக்கு வரும் பார்சல்களை மிகுந்த விழிப்புடன் கையாள வேண்டும். சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் குறித்து தெரியவந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
