பந்தலூர், ஜூன் 15: பந்தலூர் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களைச் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஏராளமான தனியார் மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. தேயிலைத் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். இவர்களை பணிக்கு அழைத்துச் செல்ல சில தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் மற்றும் இடைத்தரகர்கள், முறையான பயணிகள் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை எனத் தெரிகிறது. மாறாக சரக்கு, பிக்கப் வாகனங்கள், மினி லாரிகள் போன்றவற்றில் தொழிலாளர்களைத் ஏற்றி ஆபத்தான முறையில் செல்கின்றனர்.
மலைப்பாதைகளின் ஆபத்தான வளைவுகளிலும், சரிவுகளிலும் இந்த வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால், தொழிலாளர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இது போன்ற ஆபத்தான பயணங்களால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, வட்டார போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் தேயிலைத் தோட்ட பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு, விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
