கூடலூர்,ஜூன்15: கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற குறுகிய நாளில் சாலைகள் சேதம் அடைந்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது. சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என சமூக நல அமைப்புகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையில் பாலவாடி முதல் பாரம் வரையிலும், ஆரூற்றுப் பாறை செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் சின்னராஜ் கடை முதல் பாரதி நகர் வழியாக பழைய காவல் நிலையம் பகுதி மற்றும் மஞ்சு தேயிலை தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட இடங்களில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கப்பட்டன. பல வருட கோரிக்கைக்கு பின் சாலை சீரமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புதிதாக போடப்பட்ட அந்த சாலையின் பல இடங்களில் போதிய பிடிப்பு இல்லாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகின்றன.
சாலையோர பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டு உடைந்து வருகின்றன. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மீண்டும் சாலை பழைய நிலைக்கு சேதமாகி விடும் நிலையில் உள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு பின் சீரமைக்கப்பட்ட சாலை சேதம் அடையத் துவங்கியுள்ளதால் தரமற்ற சாலைப் பணிகளை செய்த ஒப்பந்ததாரர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் சேதமடைந்த சாலை பகுதிகளில் போடப்பட்ட தார் கலவைகளை முழுமையாக அகற்றி புதிய தார் கலவை மூலம் செப்பனிட பண்ணிட வேண்டும் என்றும், சாலையின் இருபுறமும் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதிகளை சிமெண்ட் கலவை கொண்டு தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்றும் ஓவேலி மக்கள் இயக்கம் உறுப்பினர் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த பகுதிகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
