பாலக்காடு : பாலக்காடு டவுன் பகுதியில் உள்ள பூக்கடையில் போதைப்பொருள் பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பாலக்காடு டவுன் போலீசார் நேற்று முன்தினம் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பூக்கடையில் பதுக்கி வைத்து உயர்ரக போதைப்பொருள் விற்பது தெரியவந்தது.
பாலக்காடு நரிக்குத்தி பகுதியை சேர்ந்த பூக்கடை வியாபாரி மன்சூர் அலி (எ) லுடுப்பா (30), திருநெல்லாயி பகுதியை சேர்ந்த மன்சூர் (31), கைப்பஞ்சேரிகுன்றை சேர்ந்த அன்ஷார் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, விற்பனைக்காக பதுக்கிய 32.99 கிராம் எம்டிஎம்ஏ உயர்ரக போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவர்கள் எங்கிருந்து வாங்கி, யாருக்கு விற்பனை செய்கின்றனர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
