சென்னை: தமிழகத்தில் ஒரு வாரத்தில் 7 பேர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்திய அதிரடி பொறிவைப்பு சோதனைகளில் 7 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும், இதே காலகட்டத்தில் நடந்த ஊழல் வழக்குகளின் விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றங்கள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பளித்துள்ளன .
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய 7 பொறிவைப்பு நடவடிக்கைகளில் திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3-ன் இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், வடிகால் பணிக்கான அளவீட்டுப் பதிவேடு தயாரிப்பது மற்றும் ஏற்கனவே முடிக்கப்பட்ட சாலை பணிகளுக்காக ரூ.5,00,000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார் . அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.13,00,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கீழ திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் .சரவணன் (ரூ.10,000), தேனி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் (ரூ.5,000), திண்டுக்கல் பிர்கா சர்வேயர்கள் முகமது இப்ராகிம் (ரூ.5,000) மற்றும் மீனாம்பிகை (ரூ.10,000) ஆகியோர் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டனர்.
அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் 215 நெல் மூட்டைகளுக்கான கட்டணப் பட்டியலை அனுப்ப, ஒரு மூட்டைக்கு ரூ.50 வீதம் ரூ.10,750 லஞ்சம் பெற்ற கட்டணப் பட்டியல் வசூலிப்பாளர் சௌந்தர் கைது செய்யப்பட்டார் . திண்டுக்கல் மாவட்டத்தில் லாரிக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பித்து தர ரூ.5,800 லஞ்சம் கேட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-1) சண்முக ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஊழல் வழக்குகளை விசாரித்த மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளன. விருத்தாசலம் தாலுகா அலுவலக சர்வேயர் அண்ணாதுரை மற்றும் கிராம உதவியாளர் கண்ணன் ஆகியோருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.10,000அபராதமும் விதித்து கடலூர் நீதிமன்றம் கடந்த 5ம்தேதி அன்று தீர்ப்பளித்தது
மாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊரக நல அலுவலர் இந்திராணிக்கு லஞ்ச வழக்கில் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் கடந்த 9ம் தேதி அன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது . லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த தொடர் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றங்களின் கடுமையான தண்டனைகள் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
