திருமணம் செய்து வைக்காத தந்தையை கொன்ற மகன்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த காணை அருகே ஆ.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி (75), விவசாயி. இவருக்கு 3 மகன், 2 மகள் உள்ளனர். இதில் 3வது மகன் மணிகண்டன்(40) தவிர மற்ற 4 பேருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கூலி தொழிலாளியான மணிகண்டன், கடந்த சில வருடங்களாக பெற்றோரிடம் தனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்தவர் தாய் லட்சுமி மற்றும் தந்தை அருணகிரியிடம், தனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென கட்டை மற்றும் கையால் அருணகிரியை தலை மற்றும் நெஞ்சில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் மயங்கி விழுந்த அருணகிரியை அப்பகுதியினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இது குறித்து காணை போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். திருமணம் செய்து வைக்காததால், தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: