நீலகிரி,: குடும்ப தகராறில் மனைவியை கணவர் கத்தியால் வெட்டினார். இதில் மனைவியின் ஒரு கால் துண்டானது. கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளா மாநிலம் கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் சிஜூ (40). இவரது மனைவி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மல்லிகா(33). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மல்லிகா தனது 2 குழந்தைகளுடன் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அம்பேத்கர் நகரில் உள்ள தனது சித்தி பாக்கியலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பந்தலூருக்கு வந்த சிஜூ தனது மனைவியை சமாதானம் செய்தார். பின்னர் இருவரும் நேற்று கேரள மாநிலம் மேப்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் அவர்கள் பந்தலூருக்கு காரில் வந்துகொண்டிருந்தனர். பந்தலூர் அருகே மேங்கொரேஞ் பகுதியில் வந்து நின்றபோது காரில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை சிஜூ எடுத்து மனைவியின் கண்ணில் வீசினார். தொடர்ந்து, காரில் வைத்திருந்த கத்தியால் மனைவியின் இரு கால்களிலும் வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மல்லிகா துடிதுடித்தார். இதையடுத்து அவரை பொதுமக்கள் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மல்லிகாவை அனுப்பி வைத்தார். சிஜூ வெட்டியதில் மல்லிகாவின் கால் ஒன்று துண்டானது. இது குறித்து மல்லிகாவின் தாயார் ஜெயமேரி கொடுத்த புகாரின்பேரில் தேவாலா போலீசார் வழக்குப்பதிந்து செய்தனர். கேரள மாநிலம் மேப்பாடியில் சிஜூவுக்கும், மல்லிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போதே மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட சிஜூ காரில் மிளகாய் பொடி, கத்தி ஆகியவற்றை மறைத்து எடுத்துக் கொண்டு வந்ததும், பந்தலூருக்கு வந்தபோது கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கத்தியால் வெட்டி மனைவியை கொல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிஜூவை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பந்தலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
