* ஆடியோவில் பேசி மாயமான பெண் எங்கே?
* காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சேலம்: சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் கைதான தவெக பிரமுகரின் பென்-டிரைவில் இருந்து வெவ்வேறு பெண்களுடன் இருக்கும் வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் உள்பட 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர் விஐபிகளுக்கு பெண்களை சப்ளை செய்தாரா? இந்த விவகாரத்தை வெளிச்சம் போட்டு ஆடியோவில் பேசிய நிலையில் மாயமான பெண் எங்கே? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேசும் ஆடியோ நேற்று, ‘‘சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
அதில், சேலம் நெய்க்காரப்பட்டி புத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்த தவெக பிரமுகர் மணிகண்டன் என்பவர், 50க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டி, துன்புறுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பெண்களை காக்க வேண்டும்’’ எனக்கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தவெக பிரமுகர் மணிகண்டனின் செயல்பாடு பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க கொண்டலாம்பட்டி போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இதன்பேரில் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் மணிகண்டனை பிடித்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அவரது செல்போன் மற்றும் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பென்-டிரைவ் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.அதில், மணிகண்டனின் பென்-டிரைவில் 3 பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சிக்கியது. அந்த வீடியோக்களில் பெண்களை நிர்பந்தப்படுத்தி நிர்வாணமாக்கி தொல்லை கொடுப்பதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தியநிலையில், அந்த வீடியோக்களில் இருந்த பெண்களில் 32 வயது கொண்ட ஒரு பெண் நேரடியாக வந்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில், மணிகண்டன் மீது 7 பிஎன்எஸ் சட்டப்பிரிவு மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப பிரிவு என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது, பிஎன்எஸ் பிரிவுகளில் 74-பெண்ணின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்துதல், 75(1)-பாலியல் துன்புறுத்துதல், 75(2)-விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு, 76-பெண்ணை கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்துதல், 77-பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஆபாசமாக படம், வீடியோ எடுத்தல், 78-குற்றத்திற்காக பின்தொடருதல், 79-பெண்ணின் மானத்திற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் சைகை செய்தல், 66(E)-தனிப்பட்ட அந்தரங்கத்தை படம் எடுத்து மீறும் செயல் மற்றும் வெளியிடுதல் ஆகிய பிரிவுகள் பாய்ந்துள்ளது.கைதான மணிகண்டனால், வீடியோக்களில் இருக்கும் 3 பெண்கள் மற்றும் சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்த ஒரு பெண் என இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
பெண் பேசிய ஆடியோவில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை மணிகண்டன் போனில் பார்த்ததாகவும், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருப்பதால், அவரது செல்போனை ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரது செல்போன் மற்றும் கைப்பற்றப்பட்ட பென்-டிரைவ் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசாரிடம் வழங்கி தீவிர ஆய்வு செய்யவுள்ளனர். மேலும், மணிகண்டனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராக இருந்தாலும் போலீசில் புகார் கொடுக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆடியோவில் பேசிய பெண் என்ன ஆனார்? அவர் இப்போது எங்ேக இருக்கிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தவெக பிரமுகர் மீது பரபரப்பு புகார் தெரிவித்த நிலையில் அவர் மாயமாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மணிகண்டன் தனது பாலியல் இச்சைக்கு உட்படுத்திய பெண்களை விஐபிகள் சிலருக்கு சப்ளை செய்ததாகவும் திடுக்கிடும் தகவல் கசிந்துள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு கைதான மணிகண்டனை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். இன்னும் ஓரிருநாளில் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள், அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனுக்கும், தமிழக வெற்றிக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சேலம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் ஆர்.எஸ்.மணிகண்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
