பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,ஜூன்6: ஈரோட்டில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காளை மாட்டு சிலை எல்ஐசி தெற்கு கிளை அலுவலகம் எதிரே ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழுவினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில், தேசிய அளவில் கடந்த 2 வாரமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பல முறை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் காஸ் சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அனைத்து வகை பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பல நிறுவனங்கள், சிறிய கடைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்தும்,அவற்றை நடத்துவோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பல்வேறு வகையான நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்கு மேலும் சுமை ஏற்படுத்தாமல் உயர்த்தப்பட்ட விலையை மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நிர்வாகிகள் நடராஜன், ராமசாமி, குப்புசாமி, பூவேந்திரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: