ஈரோடு, ஜூலை 31: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 2025-2026ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8ம் தேதி வெளியானது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை எழுதிய 22,478 மாணவ-மாணவிகளில் 22,225 பேர் என 98.87 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், உயர்கல்வியில் சேர்க்கை பெற ஏதுவாக அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு, நேற்று முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்திருந்தது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று முதல் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாக வழங்கும் பணி துவங்கியது. இதில், பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 2025ம் ஆண்டு நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இரண்டையும் மாணவ-மாணவிகளிடம் தலைமையாசிரியர்கள் வழங்கினர்.
