மொடக்குறிச்சி, ஆக. 4: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவு நாள், அரசு நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட எஸ்பி சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், கால்நடைத்துறை அமைச்சர் கமலி, பால் வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்று தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அமைந்துள்ள உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற அரசு விழாவில் தீரன்சின்னமலையின் வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், எம்எல்ஏ.க்கள் சண்முகன், ஆனந்த் மோகன், தாசில்தார் மோகனா உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு நாள், பிறந்தநாள் அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1992ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, தீரன் சின்னமலை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து ஓடாநிலையில் மணிமண்டபம் அமைத்து கொடுத்தார். தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா அரசு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. நல்ல ஆட்சி அமைந்தால், நல்ல மழை பெய்யும் என்று சொல்வார்கள்.
அதேபோல் தவெக தலைவர் விஜய் ஆட்சியில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நல்ல மழை பெய்து, அணைகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சுயநலமில்லா ஆட்சி நடந்து வருகிறது. ஒன்றிய அரசு வியந்து பாராட்டும் ஒரு ஆட்சியாக தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இந்த மக்களுக்கு நல்ல திட்டங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
