ஈரோடு, ஜூலை 30: கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை என்பதோடு அலட்சிய போக்குடன் செயல்படுவதாக மாமன்ற கூட்டத்தில் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 10வது வார்டு வில்லரசம்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிப்படை மற்றும் மேம்பாட்டு பொருட்கள் வாங்க ரூ.10 லட்சம் அனுமதி, 36வது வார்டுக்குட்பட்ட கனிமார்க்கெட் வணிக வளாகத்திற்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.13.50 லட்சம் நிதி, 3வது மண்டல அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த ரூ.9.90 லட்சம் நிதி, ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள நீரேற்று நிலையத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் உபகரணங்களை புதுப்பிக்க ரூ.35.60 லட்சம் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 135 தீர்மானங்களில், 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், 6வது தீர்மானமான பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணி மற்றும் இணைப்புகளாக வைப்புத்தொகை நிர்ணயம், 7வது தீர்மானமான குடிநீர் விநியோகத்திற்கான துணை விதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அத்தீர்மானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: மாநகராட்சி சார்பில் சொத்து வரி செலுத்தாத 100 பேர் பட்டியல் வெளிவந்துள்ளது. அவர்கள் எவ்வளவு கோடி கொடுக்க வேண்டும். ஏன் இதுவரை வரி செலுத்தவில்லை. இதுகுறித்து விரிவான தகவல் வெளியிட வேண்டும். வரி குறைப்பது குறித்து உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருந்தோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. வெண்டிபாளையம் குப்பை கிடங்கு பிரச்னை பல வருடங்களாக இருந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் மஞ்சள் கலரில் வருகிறது. வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கை மாற்ற முடியுமா? முடியாதா? என தெரிவிக்க வேண்டும்.
மாநகராட்சி முழுவதும் வரும் குப்பைகள் வெண்டிபாளையத்தில் கொட்டப்படுகிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகள் யாரும் மாமன்ற உறுப்பினர்களை மதிப்பதும் இல்லை. அவர்கள் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. அதிகாரிகள் அலட்சிய போக்கில் செயல்படுகின்றனர். காமராஜர் வீதி வணிக வளாகத்தில் சிங்கிள் டெண்டர் வந்துள்ளது. அதை ரத்து செய்து புதிய டெண்டர் வைக்க வேண்டும். மாநகராட்சியில் விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் இதுவரை செயல்படுத்தவில்லை. ஆனால், பொதுமக்களிடம் இருந்து பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத்தொகை வசூலிக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கபட்டு வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத்தொகை வசூலிக்க கூடாது. வசூலிக்கப்பட்டவர்களிடம் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும். பி.பெ.அக்ரஹாரத்தில் ஏழை, எளிய மக்களுக்காக கட்டப்பட்ட சமுதாய கூடம், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலமாக செயல்பட்டு வருகிறது. எனவே, அக்கட்டிடத்தை மீண்டும் சமுதாய கூடமாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேறொரு அலுவலகம் அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்குரிய பணப்பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் மீது மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை எடுத்துக்கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், வாக்களித்த பொதுமக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது என்பது தெரியவில்லை. பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வரும் நிலையில், உடைந்த குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்டனத்துக்குரியது. அதாவது கவுன்சிலர்கள் பொதுவெளியில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் கிட்டாச்சி, ஜேசிபி, குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பற்றாக்குறையால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிட்டாச்சி வாகனங்கள் இல்லாததால், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகள் தூர்வார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வார்டுகளில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு பதிலாக புதிய ஆட்கள் நியமிக்கவில்லை. ஈரோடு மாநகராட்சியில் குப்பை வரி முதல் அனைத்து வரிகளும் மக்களிடம் பெறுகிறோம். ஆனால், தூய்மைப்பணி முழுமையாக செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் கவுன்சிலர்கள் வார்டுகளின் நிலவும் பிரச்னைகள் குறித்து பேசுகிறோம். ஆனால், அதில் ஒரு பிரச்னைக்காவது அதிகாரிகள் தீர்வு கண்டு இருக்கிறீர்களா? கூட்டத்துக்கு வந்து டீ குடித்து விட்டு செல்வதுதான் எங்கள் வேலை என்று கருதுகிறீர்களா? அதிகாரிகள் தயார் செய்யும் தீர்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல. எங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இதற்கிடையே, பொதுமக்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த மேயர் நாகரத்தினம், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்றும் கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
