ஈரோடு, ஜூலை 30: தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 18 கன அடியாக குறைந்துள்ளது. பவானி சாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது. இதன் மூலமாக சுமார் 2.47 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 105 அடி கொண்ட பவானிசாகர் அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும். கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு அதிக அளவில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு அதிகம் என்பதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 55.32 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 18 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி வீதம் என மொத்தம் 755 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
அதேபோன்று, மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 18.42 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 19.44 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டம் 15.16 அடியாகவும் சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
