கேரளாவில் கன மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9,743 கன அடியாக அதிகரிப்பு

 

சத்தியமங்கலம்,ஆக.3: கேரளாவில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி கொள்ளளவு கொண்டதாகும். பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வழக்கமாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை எல்நினோ தாக்கம் காரணமாக சரி வர மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்த நிலையில், கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 9,743 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 56.05 அடி ஆகவும், நீர் இருப்பு 6.04 டிஎம்சி ஆகவும் இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 850 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 855 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 

Related Stories: