சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று வந்த நடிகை ஜூலி, தனது கணவருடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: நான் தவெக கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவித்த ஒரே காரணத்திற்காக, சிலர் என்னை கொச்சையாகச் சிதைக்கிறார்கள். அவர்கள் என் மீது கிட்னி திருடியதாகக் கூறுவது போன்ற கற்பனை செய்ய முடியாத அவதூறுகளைப் பரப்புகிறார்கள். என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவர்கள் மீது புகார் கொடுக்கவே வந்திருக்கிறேன்.
இது தொடர்பாக எட்டு பேர் மீது நான் புகார் கொடுத்தேன். ஆனால், காவல்துறை என் வசம் உள்ள ஆடியோ ஆதாரங்களையோ, ஸ்கிரீன் ஷாட்களையோ வாங்கிப் பார்க்கக்கூட இல்லை. சட்ட ஆலோசகர் மூலம் விசாரிப்பதாகச் சொல்லிவிட்டு, என்னை விசாரணைக்குக் கூட அழைக்காமல், வழக்கை எடுக்க மறுத்துவிட்டார்கள். ஆளும் தரப்பிற்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்றுதான் கேட்கிறேன்.
என்னையும் என் கணவரையும் பற்றிப் பெசன்ட்நகர் பீச்சில் வைத்து 15 லட்சம் பணம் வாங்கினோம், கிட்னி தருவதாக ஏமாற்றினோம் என்று ஒரு சினிமா ஸ்கிரிப்ட் போலக் கதை கட்டுகிறார்கள். எனக்கு எதிராகவும், என் குடும்பத்திற்கு எதிராகவும் ஆபாசமாகப் பேசுபவர்கள் மீதும், கொலை மிரட்டல் விடுபவர்கள் மீதும் காவல்துறை உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
