கோவை: ஆபாசத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளதாக யூ டியூபர்கள் கிருஷ்- ஐஷ்வர்யா மீது கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த தம்பதி தேர்தல் நேரத்தில் விஜய் ஆதரவாக பிரசாரம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையை சேர்ந்த வழக்கறிஞர் நவேஷ் ராஜ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் யூ டியூப் தம்பதி கிருஷ் – ஐஷ்வர்யா மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: கிருஷ், ஐஷ்வர்யா தம்பதி சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர்கள். இவர்கள் சமீபத்தில் நாட்டி அமெரிக்கா (Naughty America) என்கிற பெயரில் ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீடியோக்களை 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளும் அதிகளவு பார்க்கிறார்கள்.
எனவே, அவர்களை திசை திருப்பும் வகையில் இந்த வீடியோக்களின் செயல்பாடு உள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவுவதால் தவறான வழி நடத்தலாக அமையும். இது சிறுவர், சிறுமிகளை மிகவும் பாதிக்கும் என்பதால், தகவல் அறியும் உரிமை சட்டம் (பிரிவு 2000), பிஎன்எஸ் சட்டம் 2023 பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம். எனவே அந்த சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த வீடியோக்களை யூ டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். தொடர்ந்து அவர்களின் சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும். இதுபோன்ற ஆபாசத்தை தூண்டும் வீடியோக்களை பதிவேற்றுவதன் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாருக்குள்ளான தம்பதி, தேர்தல் நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்து வீடியோக்களை பதிவு செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
