திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் உதவியாளரிடமே தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடைபெறுவதையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், நேற்று காலை பிரவுன் பேண்ட், கருப்பு டி சர்ட், முகத்தில் மாஸ்க் அணிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் உதவியாளர், பாதுகாப்பு போலீஸ் அதிகாரி ஆகியோர் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு வந்தனர். முதலில் கோயில் சண்முக விலாச மண்டபம் எதிர்புறம் உள்ள வெள்ளை கல் மண்டபம் அருகே நின்று நடப்பதை கவனித்தனர். அப்போது கோயில் முகப்பில் சில அர்ச்சகர்கள் பக்தர்கள் சிலரை தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.
அமைச்சரின் உதவியாளரும், அர்ச்சகர் ஒருவரிடம் சுவாமி தரிசனம் செய்வதற்கு பேரம் பேசினார். அப்போது 4 பேர் செல்வற்கு தலா ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் என பேசி ஜிபே வழியாக பணம் வாங்கியுள்ளார். பின்னர் அதிகாரியிடம் பணம் பேசி மாட்டிக்கொண்டதை உணர்ந்த கோயில் அர்ச்சகர் அங்கிருந்து செல்ல முயன்றார். உடனடியாக அமைச்சர் ரமேஷ், அங்கிருந்தவர்களிடம் விசாரித்து விட்டு நேராக அன்னதான மண்டபத்திற்கு வந்தார்.
அங்கு கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு நுழைவு சீட்டு கொடுக்காமல் அன்னதான மண்டபத்திற்குள் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இதனிடையே அமைச்சர், ரகசிய விசிட்டை அறிந்து கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பாளர் விவேக் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அப்போது கோயில் பணியாளர்களிடம் நடந்த சம்பவத்தை அப்படியே எழுதி தரும்படி கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் ரகசிய ஆய்வு குறித்து அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அமைச்சர் ரமேஷ் மற்றும் அவருடன் வந்த தவெக நிர்வாகிகள் அன்னதானத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். தொடர்ந்து கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் கோயில் சண்முக விலாச மண்டபம் முகப்பு, கடற்கரை, புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, கார் பார்க்கிங் செய்வதற்குரிய இடத்தை அமைச்சர் ரமேஷ் பார்வையிட்டார்.
காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது தொடர்ந்து ஆய்வு நடைபெறும் என்று அமைச்சர் கூறினார். இதனிடையே திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்துக்கு லஞ்சம் வாங்கி முறைகேடு செய்தது தொடர்பாக அர்ச்சகர் ஐயப்பன் மறு உத்தரவு வரும் வரை கைங்கரிய பணிகள் செய்தவதற்கு தடை விதித்தும், முடி காணிக்கை மண்டபத்தில் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மொட்டை போட்டதாக கூறி மறு உத்தரவு வரும் வரை சங்கர், நாகராஜ் ஆகிய 2 பணியாளர்களை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிடப்பட்டது.
அதேபோல் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் கருப்பசாமி, தோப்பு ஆகியோரை பணியில் இருந்து விடுவித்தும் அமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அர்ச்சகர் ஐயப்பன், தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் கருப்பசாமி, தோப்பு ஆகியோர் மீது கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
* வழக்குப்பதிவு செய்யப்படுமா?
அர்ச்சகர் லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார். அதேபோல், தான் லஞ்சம் வாங்கினேன் என்று அர்ச்சகரும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம். எனவே, லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் மீதும், பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தி சஸ்பெண்ட், டிஸ்மிஸ் ஆன ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
* உலா வரும் மன்னிப்பு கடிதம்
லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் அமைச்சருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாக சமூக வலைதளங்களில் ஒரு கடிதம் உலா வருகிறது. அதில், அமைச்சர் என தெரியாமல் தங்களிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கி விட்டோம். மன்னித்து விடுங்கள் என கூறப்பட்டுள்ளது. பொதுவாக மன்னிப்பு கடிதம், விளக்க கடிதம் அதிகாரி என்ற முறையில் கோயில் இணை ஆணையருக்கு தான் அளிப்பது வழக்கம். ஆனால் அமைச்சருக்கு எழுதியதாக குறிப்பிட்டுள்ள மன்னிப்பு கடிதம் குறித்து உண்மையா? என உறுதிப்படுத்த திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது.
* அடுத்தடுத்து 4 அமைச்சர்கள் தரிசனம் தவெக வாகனங்களால் பக்தர்கள் அவதி
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சிறு, குறு தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா ஆகியோர் நேற்று அடுத்தடுத்து திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர். அவர்களது கார்களை கோயில் வளாகத்தில் ராஜகோபுரம் முன்புள்ள கிரிப்பிரகாரத்தில் நிறுத்தியதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்வதற்கு வந்தபோது அவரது கார் கிரிப்பிரகாரத்தில் வந்து சென்றது. பொதுவாக திருச்செந்தூர் கோயிலுக்கு வருபவர்கள் தங்கள் காலணிகளை விருந்தினர் மாளிகையில் கழற்றி வைத்து விட்டு கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் அமைச்சர் ஸ்ரீநாத் கோயில் முன்பு வரை பேட்டரி காரில் வந்து காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே சென்றார்.
* விளக்க கடிதம் தான் பெறப்பட்டு உள்ளது: அமைச்சர் பேட்டி
ஆய்வு குறித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் ஏராளமான புகார்களை என்னிடம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் பல்வேறு புகார்கள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் ரகசியமாக ஒரு ஆய்வு செய்யலாம் என்ற நோக்கத்தில் அதிகாலையில் வந்தேன்.
முகக்கவசம் அணிந்து தான் வந்து ஆய்வு செய்தேன். அப்போது கோபுர முகப்பு பகுதியில் பக்தர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நேரடியாக தரிசனத்துக்கு அழைத்து செல்வதை கண்டுபிடித்து உள்ளோம். அர்ச்சகர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும், பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், அவர்களிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி கொண்டு மன்னித்து விட்டுவிட்டது போல இணையத்தில் தவறான ஒரு தகவல் பரப்பப்பட்டு உள்ளது. அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எதுவும் வாங்கவில்லை. விளக்க கடிதம் தான் பெறப்பட்டு உள்ளது. அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்துள்ளோம். மேலும் கோயில் சொத்துகள், கோயிலுக்கு வர வேண்டிய வருமானங்கள் எங்கெல்லாம் தடைபட்டுள்ளது, பக்தர்கள் விரைவாக தரிசனம் முடித்துவிட்டு செல்வதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளோம்.
உண்மையிலேயே குற்றம் செய்தது யாராக இருந்தாலும் எந்த பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டு யாராக இருந்தாலும் தவறு செய்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
