சென்னை: சென்னையில் சிறுவன் ஒருவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வடபழனி தலைமை காவலர் வேலப்பன் (35) காவல்துறையிலிருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிரடி உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது 16 வயது சிறுவனுடன் கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குக் கோடை விடுமுறையைக் கழிக்க வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு, வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வரும் வேலப்பன், கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் (சிறுவனின் மாமா) வீட்டுக்கு மது அருந்தச் சென்றுள்ளார். நள்ளிரவில் நண்பர் உறங்கச் சென்றதை தொடர்ந்து, அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த வேலப்பன், அறையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அச்சிறுவனுக்கும் கட்டாயப்படுத்தி மது கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
தலைமை காவலரின் இந்த கொடூர அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த சிறுவன், சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனை ஓங்கி அடித்துவிட்டு, அவரை அறைக்குள்ளேயே வைத்து வெளிப்பக்கமாகப் பூட்டினான். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நேராகச் சென்று புகார் அளித்தான். சிறுவனின் புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட அசோக் நகர் போலீசார், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமை காவலர் வேலப்பனை நேற்று முன் தினம் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் வேலப்பன் முதற்கட்டமாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் காவல்துறை அதிகாரியே ஈடுபட்டது கடுமையான விதிமீறல் என்பதால், சிறையில் உள்ள தலைமை காவலர் வேலப்பனை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
