சென்னை: எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு (நிலை 2) பணியமர்வு ஆணை மற்றும் தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் என மொத்தம் 50 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.
குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 வழக்குரைஞர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் பெருநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை நடத்துவர். அத்துடன் அவர்கள் மாற்றுப் பணியில் பல்வேறு அரசு துறைகளில் சட்ட ஆலோசகர்களாக பணிபுரிவர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2ல் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றிற்கு பின் அப்பணியிடத்திற்கு 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணியிடத்திற்கான பணியமர்வு ஆணைகளை அமைச்சர் நிர்மல்குமார் வழங்கினார்.
மேலும் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் செங்கல்பட்டு ஆகிய அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 5 பொருளாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக சட்டக் கல்வி இயக்ககம் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் பணிபுரிகின்ற 5 கண்காணிப்பாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கி ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் உள்துறை செயலாளர் மணிவாசன், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் கவுரி ரமேஷ், குற்ற வழக்கு தொடர்வு இயக்குநர் கீர்த்தி ராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
