சோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு

வேலூர், மார்ச் 4:தனியார் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் பள்ளி இடை நின்ற 15 வயது சிறுமி உள்ளதாக ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜூக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவ.கலைவாணன் தலைமையிலான குழுவினர் சோளிங்கரில் இருந்த சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு, பராமரிப்பு, எதிர்கால நலன், கல்வி நலன் கருதி அவரை காட்பாடி அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் நலக்குழு மூலம் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அச்சிறுமியை காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்க்க மாவட்ட குழந்தைகள் நலக்குழு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து சிறுமியை பள்ளியில் சேர்ப்பதற்கான ஆணையை வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, மாணவிக்கு 9ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பை, குறிப்பேடுகள் ஆகியவற்றை நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சரளா, உதவி தலைமை ஆசிரியர் ஷோபா, தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன், காட்பாடி அரசு குழந்தைகள் இல்ல காப்பாளர் விஜயா, பள்ளித்துணை ஆய்வாளர் மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: