அதிமுகவில் இருந்து விலகலா? விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி

புதுக்கோட்டை: அதிமுகவில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்து உள்ள பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம், எஸ்பி.வேலுமணி தரப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிந்தனர். இதில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

அதே நேரத்தில் இரு அணிகளின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இரு அணிகளும் மீண்டும் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டும் எடப்பாடியை சந்திக்க மறுத்துவிட்டனர். இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுகவில் தொடரலாமா அல்லது தவெகவில் சேரலாமா என்பது குறித்து கருத்துக்களை கேட்டுள்ளார்.

மேலும் அரசியலில் இருந்து ஒதுங்கலாமா என்ற கருத்தையும் விஜயபாஸ்கர் கேட்டதாக கூறப்படுகிறது. நேற்று முகூர்த்த நாள் என்பதால், புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதை நான் முதல் கடமையாக பார்க்கின்றேன். நன்றி தெரிவிப்பு முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கின்றேன் என்றார்.

தற்போது வரை அதிமுகவில் தான் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தான் பயணிக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் அதிமுகவில் தொடர்வதாக அவர் கூறவில்லை. முகூர்த்த நாள் என்பதால் தொடர்ந்து பல்வேறு விசேஷங்களில் பங்கேற்று விட்டு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன் என்று தெரிவித்துவிட்டு, நான் வாகனத்தில் செல்ல வேண்டும் வழி விடுங்கள் என்று கூறி சென்றார்.

Related Stories: