போர் சூழல் காரணமாக தமிழகத்தில் உரம் விலை கடும் உயர்வு: பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை 15 சதவீதம் அதிகரிப்பு; விவசாயிகள் வேதனை: உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னை: இஸ்ரேல் – ஈரான் இடையே மேற்கத்திய நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக தமிழகத்தில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய – மாநில அரசுகள் தலையிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்ற சூழல் காரணமாகவும், ஹார்முஸ் நீரிணை வழியான வணிகக் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு உரத்தை இறக்குமதி செய்வது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உரங்களின் விலை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். முன்னணி உர நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் உரங்களின் விலை ஒரு மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.650 வரை கணிசமாக அதிகரித்துள்ளது.

இவற்றுடன், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உரங்கள் தயாரிப்பதற்கு தேவையான திரவ இயற்கை எரிவாயு, அமோனியா மற்றும் சல்பர் ஆகிய மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் விண்ணை தொட்டுள்ளது. இந்த மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, இப்கோ உள்ளிட்ட முன்னணி உள்நாட்டு உர நிறுவனங்களும் தங்களது ஆலைகளில் உற்பத்தியை குறைத்துள்ளன.

இது சந்தையில் உர தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் ஒருசேர உருவாக்கியுள்ளது. குருவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகளுக்கு தயாராகி வரும் வேளையில், இந்த திடீர் விலை உயர்வு விவசாயிகளின் சாகுபடிச் செலவை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. ஒருபுறம் உரங்களின் விலை உயர்ந்தாலும், தாங்கள் உற்பத்தி செய்யும் நெல் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த உர விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு மானியங்களை உயர்த்த வேண்டும் என்றும், தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்த உர விலை உயர்வு நீடித்தால், சாகுபடிப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் அரிசி மற்றும் உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் கடும்பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு உடனடியாக உரங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்க வேண்டும். மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* உரங்களின் புதிய விலை பட்டியல்
உரத்தின் வகை பழைய விலை புதிய விலை உயர்வு
காம்ப்ளக்ஸ் ரூ.1,550 ரூ.2,200 ரூ.650
பொட்டாஷ் ரூ.1,850 ரூ.2,250 ரூ.400
பாக்டம்பாஸ் ரூ.1,750 ரூ.2,150 ரூ.400
அம்மோனியம் சல்பேட் ரூ.1,200 ரூ.1,400 ரூ.200
சூப்பர் பாஸ்பேட் ரூ.600 ரூ.800 ரூ.200

Related Stories: