நெல்லை: தமிழகத்தை உலுக்கிய ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கில் பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27). இவர் சென்னையில் ஐடி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த ஆணவக்கொலை தொடர்பாக நெல்லை மாநகர போலீசார் வழக்கு பதிந்து கவினின் காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன் ஆகியோரை கைது செய்தனர். தாய் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி தலைமறைவாகி விட்டார். கவின் மற்றும் சுபாஷினி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆணவக் கொலை நடந்தது தெரியவந்தது. பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தந்தை, மகனை காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனர்.
இதில் கிடைத்த தகவல்களின்படி சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் (29) என்பவரை கைது செய்தனர். கைதான 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலையில் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை 10 மாதங்களாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாய்தாவின் போது நீதிபதி ஹேமா, ஏன் பெண் எஸ்ஐ-யை கைது செய்யவில்லை என சிபிசிஐடி போலீசாரை கேள்வி எழுப்பினார்.
பின்னர், ஜூன் 9ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். கோர்ட்டில் நீதிபதி கேள்வி எழுப்பியதால், பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை 10 மாதங்களுக்குப்பின் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அப்போது கிருஷ்ணகுமாரி கதறி அழுதார். திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் பிற்பகலில் நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். அவர், ஜூன் 9ம் தேதி வரை கிருஷ்ணகுமாரியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கவின் கொலை வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
* சாட்சியில் குழப்பம்
கவின் கொலை வழக்கில் மாநகர போலீசார் கவின் தாயார் கிருஷ்ணகுமாரியை கொலையை நேரில் கண்ட சாட்சி என்ற அடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் சிபிசிஐடி போலீசார் நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை என்ற அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை மாற்றி விசாரணை நடத்தினர். இது கோர்ட்டில் கடும் விவாதத்திற்கு உள்ளானது.
