90 சதவீத தொண்டர்கள் இணைவார்கள் என்பதா? அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மாறுவோர் உதிர்ந்த ரோமங்கள்: அதிமுக கொறடா காட்டம்

திருவண்ணாமலை: அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மாறுவோர் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் என்று திருவண்ணாமலையில் அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்று அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டி: அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவார்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சொல்லி இருக்கிறார். ஏன் தவெகவில் ஆட்களே இல்லையா? கட்சி நடத்த பலம் இல்லையா?.

குதிரை பேரத்தின் மூலம் அதிமுகவினரை இழுப்பதுதான் விஜய் சொன்ன தூய சக்தியா?. கடந்த 1996ல் அதிமுக தோற்ற பிறகு கட்சியை விட்டு சிலர் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றனர். அப்போது, அவர்களை உதிர்ந்த ரோமங்கள் என ஜெயலலிதா சொன்னார். அதேபோல், இப்போது உதிர்ந்த ரோமங்கள் கட்சியைவிட்டு சென்று கொண்டிருக்கிறது. ஆதவ் அர்ஜூனா யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். பல்வேறு கட்சிகளில் இருந்தவர், பின்னர் விசிகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு அதிமுகவில் இணைவதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார்.

அதிமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுத்துவிட்டார். எனவே, தவெகவில் சேர்ந்தார். அமைச்சர் பணியை விட்டுவிட்டு, குதிரை பேரம் செய்கிறார். இது என்ன லாட்டரி வியாபாரமா. அதிமுக நிர்வாகிகளையும் எம்எல்ஏக்களையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அவர்கள் நடத்தும் குதிரை பேரம் நாட்டிற்கே தெரிந்திருக்கிறது. இது குறித்து சிபிஐ விசாரணை கேட்போம்.

அதிமுக- திமுக கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்ததாக ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் போன்றவர்கள் தவறான பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். திமுகவுக்கு எதிராக உருவானது அதிமுக. எண்ணெயும், தண்ணீரும் என்றைக்கும் இணையாது. மக்களை திசை திருப்ப பொய் பிரசாரம் செய்கின்றனர். இந்த தேர்தலில் தவெக 34 சதவீத வாக்குகளைத்தான் வாங்கி இருக்கிறது. 66 சதவீத மக்கள் அதற்கு எதிராக உள்ளனர்.

அதிகாரம் யாரிடம் என்பதில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்துக்கும், ஆதவ் அர்ஜூனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. விஜய்க்கு அடுத்த இடம் யாருக்கு என்பதில் அதிகார மோதல் ஏற்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகத்தை கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் கட்சி அலுவலகங்களாக மாற்றி இருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இதனை, விஜய் தடுத்து நிறுத்த வேண்டும்.

வருங்காலத்தில் இதுபோன்ற நிலை உங்கள் கட்சிக்கு ஏற்படாதா?. அதோடு, 108 எம்எல்ஏக்களை கொண்ட தவெக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக, அதிமுகவின் 4 எம்எல்ஏக்களை பல கோடி ரூபாய் கைமாற்றியதன் மூலம் ராஜினாமா செய்ய வைத்துள்ளீர்கள் என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் சரியான பதிலடி தருவார்கள். தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் கொலை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை என சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: