2வது டெஸ்ட் போட்டியில் ஷாக் ஆன பாக்… தொடரை வென்று வங்கதேசம் அசத்தல்

 

சில்ஹெட்: பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி, 78 ரன் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி, கடந்த 16ம் தேதி சில்ஹெட் நகரில் துவங்கியது. முதல் இன்னிங்சில், வங்கதேசம் 278 ரன்களும், பாகிஸ்தான் 232 ரன்களும் எடுத்தன. அதையடுத்து, 2வது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் அணி, 3ம் நாளின் பிற்பகுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 390 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் முஸ்தபிசுர் ரஹிம் 137, துவக்க வீரர் மஹ்மதுல் ஹஸன் ஜாய் 52, லிட்டன் தாஸ் 69 ரன்கள் எடுத்திருந்தனர். அதன் பின், 437 ரன்கள் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி, 2வது இன்னிங்சை தொடர்ந்தது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான், 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், கடைசி நாளான நேற்று, பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 75, சாஜித் கான் 8 ரன்னுடன் 2வது இன்னிங்சை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் சாஜித் கான் (28 ரன்), தைஜுல் இஸ்லாம் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான் 94 ரன்னில், ஷோரிபுல் இஸ்லாம் பந்தில் அவுட்டானார்.

அடுத்த ஓவரை வீசிய தைஜுல் இஸ்லாம், குர்ரம் ஷாஸாத்தை ஆட்டமிழக்கச் செய்தார். 358 ரன்னுக்கு பாகிஸ்தானின் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், 78 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. முதல் இன்னிங்சில் 126, 2வது இன்னிங்சில் 69 ரன்கள் விளாசிய வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் ஆட்ட நாயகன்.

Related Stories: