பின்னுக்கு சென்ற ரிஷப், ரஸல்; வைபவ் பேட் பிடிச்சா… சாதனைக்கு பஞ்சமில்லே: 500 ரன், 53 சிக்சர் விளாசி அசத்தல்

 

ஜெய்ப்பூர்: ஒரு ஐபிஎல் தொடரில் மிகக்குறைந்த வயதில் 500 ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளை எதிர்கொண்டு 10 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசினார். அவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.

இந்த ஸ்கோருடன் சேர்த்து, மிகக் குறைந்த வயதில் 500 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சாதனையை 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன், 2018ல், டெல்லி அணிக்காக ஆடிய ரிஷப் பண்ட், 20வது வயதில் படைத்திருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில், வைபவின் ஸ்டிரைக் ரேட், 236.3 ஆக உள்ளது. இதன் மூலம் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் (குறைந்தது 500 ரன்கள்) உள்ள வீரர் என்ற சாதனையையும் வைபவ் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் ஆண்ட்ரூ ரஸல் 204.8 ஸ்டிரைக் ரேட்டுடன் 2ம் இடத்திலும், அபிஷேக் சர்மா 202 ஸ்டிரைக் ரேட்டுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். ஒரு ஐபிஎல் தொடரில் 50 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் (நடப்பு தொடரில் 53 சிக்சர்) வைபவ் வசம் வந்துள்ளது. இந்த பட்டியலில், கிறிஸ் கெயில் 2012ல் 59 சிக்சர்கள் விளாசியதன் மூலம் முதலிடத்தில் உள்ளார். இன்னும் 7 சிக்சர்கள் விளாசினால், வைபவ் சூர்யவன்ஷி, கெயிலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார்.

Related Stories: