3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்யுமா வங்கதேசம்? இன்று கடைசி நாள் ஆட்டம்

 

டாக்கா: வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய வங்கதேச அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 126 ரன் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாபர் அசாம் அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். வங்கதேச அணி தரப்பில் தஜ்ஜுல் இஸ்லாம், நஹித் ரானா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய வங்கதேச அணி 390 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹிம் 137 ரன், லிட்டன் தாஸ் 62 ரன் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டும், சஜித் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்து உள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 71 ரன் எடுத்தார். முகமது ரிஸ்வான் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் வீழ்த்தினார். இன்று கடைசி நாள் போட்டி நடக்கிறது. மீதமுள்ள 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்ய வங்கதேச அணி முனைப்பு காட்டும். அதே நேரத்தில் 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்ய பாகிஸ்தானும் போராடும் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: