கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 65வது போட்டி கொல்கத்தாவில் நேற்று, மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீசியது. அதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா களமிறங்கினர். கொல்கத்தா வீரர்கள் துல்லியமாக பந்து வீசியதால் மும்பை அணியினர் திணறலுடன் ஆடினர். கேமரூன் கிரீன் வீசிய 3வது ஓவரில் ரையான் ரிக்கெல்டன் (6 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நமன் திர், கிரீன் வீசிய பந்தில் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவை (15 ரன்) சவுரவ் துபே அவுட்டாக்கினார்.
பின், சவுரவ் துபே வீசிய 6வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் (15 ரன்) ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். 8 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழந்து 57 ரன் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஆட்டம் எந்த ஓவர் குறைப்பும் இன்றி மீண்டும் துவங்கியது. களத்தில் இருந்த திலக் வர்மா – பாண்டியா ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சவுரப் துபே, கேமரான் கிரீன் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா விளையாடியது. இதில், கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
