50 வயதான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை

கோவை, மார்ச் 3: கொரோனா காரணமாக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 50 வயதிற்கு மேலுள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பயிற்சி வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் வைக்கக்கூடாது. கொரோனா பாதிப்பு இருந்து வருவதால் 50 வயதிற்கு மேலுள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தவிர, கர்ப்பிணி பெண் ஆசிரியை, புற்றுநோய் போன்ற கடுமையான நோய் தொற்றுள்ள ஆசிரியர்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும். ஆசிரியரிகளின் இல்ல முகவரி அடிப்படையில், அவர்கள் அதே தொகுதியில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, பெண் ஆசிரியைகளுக்கு வீட்டில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் பணி செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். 9,10,11 வகுப்புகளுக்கு தேர்வுகள் இல்லாத நிலையில், சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக இருப்பதை நீக்கி, விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் சென்றுவர சரியான போக்குவரத்து வசதி, பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், தேர்தல் பணியின் போது ஆசிரியர்களுக்கு உணவு, குடிநீர், வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>