வேளச்சேரி: பள்ளிக்கரணை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழைய குற்றவாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளிக்கரணை பவானி அம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பள்ளிக்கரணை காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த 1 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் ஒருவர் வேளச்சேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்கிற ஹரி பிரசாத் (35) என்பதும், இன்னொருவர் அவரது நண்பர் சைதாப்பேட்டையை சேர்ந்த அப்துல் ரஹீம் (25) எனவும் தெரியவந்தது.
மேலும் பாலசுப்பிரமணியம் ஹரி பிரசாத் போலீசாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த ஒரு முக்கிய குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே சேலையூர், பள்ளிக்கரணை ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
