சட்டமன்ற தேர்தல் எதிரொலி சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனை நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும் வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு

வேலூர், மார்ச் 2: அனைத்துவிதமான வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்று வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நிலைகளிலும் தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு அதை செயல்படுத்தும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக பல்வேறு துறை அலுவலர்கள், தேர்தல் நடவடிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவருடனும் கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்.அதன்படி, நேற்று பொதுத்துறை, தனியார் வங்கி மேலாளர்களுடன் மாவட்ட கலெக்டர் சண்முகசந்தரம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், வங்கி மேலாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பேசியதாவது:தமிழக சட்டமன்ற தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய தேர்தல் விதிமுறை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு மாறான பண பரிவர்த்தனை தொடர்பாக, அனைத்து வங்கி மேலாளர்கள் மற்றும் பணக்காப்பகங்கள் வைத்துள்ள வங்கி மேலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பயன்படும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பி்ப்ரவரி 26ம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து வங்கி பணக்காப்பகங்களும் பண எடுப்பு மற்றும் பண விடுவிப்பு, பண பரிவர்த்தனை விபரங்களை நாள்தோறும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிப்ரவரி26ம் தேதி முதல் அனைத்து வங்கி கிளைகளும் ₹10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பண வைப்பு, பணம் எடுப்பு விவரங்கள் மற்றும் ₹1 லட்சத்துக்கு மேற்பட்ட பணம் எடுப்பு விவரங்கள், சந்தேகத்துக்குரிய அனைத்து பண பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேணடும். அதேபோல் சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனை- ஆர்டிஜிஎஸ் மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கியின் பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டால் அதன் விவரத்தை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும். கிராமப்புற வங்கி கிளைகளில் நீண்டகாலமாக பரிவர்த்தனை ஏதுமற்ற வங்கி கணக்குகளில் தற்போது சந்தேகத்துக்கு உரிய வகையில் பணபரிவர்த்தனை நடந்து இருப்பின் அதன் விவரங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.மேற்கூறப்பட்ட அனைத்து சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனைகள் மற்றும் ₹10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணம் வைப்பு, பணம் எடுப்பு விவரங்கள் மற்றும் ₹1 லட்சத்துக்கு மேற்பட்ட பணம் எடுப்பு விவரங்களை தினமும் Email id:-paacvellore@gmail.com என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக தானியங்கி பணம் வைப்பு மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்ல வங்கி முகவர்கள் உரிய சான்றுகளை கையுடன் எடுத்து செல்ல வேண்டும். அச்சான்றில் டெனாமிஷேன் வாரியாக குறிப்பிட்டு வங்கி அலுவலரின் கையொப்பம் இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பண பரிவர்த்தனை செய்யும்போது அந்தவங்கி அலுவலரின் அங்கீகரிப்பு சான்று இணைக்கப்பட்டு தெளிவாக எந்த காரணத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

Related Stories:

>