கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கற்பிக்க வேண்டும்: பிரதமர் மோடி

தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மக்களை கேட்டுக்கொண்டார். தங்கம் வாங்குவதை குறைத்தல், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், வீட்டில் இருந்து பணி ஆகியவற்றை ஓராண்டுக்கு பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் நாட்டின் பொருளாதராத்தை மத்திய அரசு பலவீனமாக்கிவிட்டதாக விமர்சித்தனர்.

இந்நிலையில் குஜராத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கற்பிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எரிபொருட்களை சேமிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதிக விலைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று பேசிய பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா இந்தியாவில் 65 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலும் மற்றும் 45 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதாக தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதற்கான ஆயத்தம் தான் எரிபொருள் சேமிப்பு என்ற பிரதமரின் முழக்கம் என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதனால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்பட கூடும் என்ற அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.

Related Stories: