புதுடெல்லி: உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சோமநாதர் கோயில் கடந்த 1951ம் ஆண்டு மே 11ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதன் 75வது ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சோமநாதருக்கு சிறப்பு பூஜைகள், கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சோமநாதரை வழிபட்டார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “உலகின் எந்தவொரு சக்தியாலும் அதன் அழுத்தங்களுக்கு இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது. தேச நலனே முக்கியமாக இருக்கும்போது எந்த அழுத்தமும் நம் உறுதியை அசைக்க முடியாது. இந்தியாவின் பாரம்பரியமும், நவீனத்துவமும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. இவையிரண்டும் கைக்கோர்த்து பயணிக்கின்றன. 1998ம் ஆண்டு ேம 11ம் தேதிதான் இந்தியா தனது அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதனால் இந்த நாளும் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒருநாட்டின் அடையாளத்துடன் இணைக்கப்பட்ட இடங்களை வௌிநாட்டு படையெடுப்பாளர்கள் அழித்ததற்கு உலகெங்கும் பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. மக்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுத்து, கண்ணியத்தை நிலைநிறுத்துகிறார்கள். இருப்பினும் நம் நாட்டில் தேச சுயமரியாதை தொடர்பான பிரச்னைகளில் கூட அரசியல் விளையாடுகிறது. நாட்டிலுள்ள சில சக்திகள் தேச சுயமரியாதையை விட திருப்தி அரசியலுக்கு தொடர்ந்து முன்னுரிமை தந்து வருகிறது. இதற்கு சோம்நாத் கோயில் ஒரு சிறந்த உதாரணம். சர்தார் வல்லபாய் படேல் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் சோம்நாத் கோயிலை மீண்டும் கட்டுவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்தனர். ஆனால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் எதிர்ப்பை எதிர்கொண்டனர். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும்போதும் இதேபோன்ற நிகழ்வை நாம் கண்டோம்.
வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் இணைத்து கொண்டு நாம் முன்னேற வேண்டும். நம் கலாச்சார மையங்களின் புறக்கணிப்பு உண்மையிலேயே நமது முன்னேற்றத்துக்கு ஒரு தடையாக உள்ளது” என்று இவ்வாறு தெரிவித்தார்.
