மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை 1 முதல் அமல்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி மசோதா என்ற பெயரில் புதிய மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தில் 100 நாள் வேலை என்பது 125 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக பாஜ அரசு கூறி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் விபி ஜி ராம் ஜி சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்துக்கு பதிலாக, புதிய விக்சித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்(கிராமின்)(விபி ஜி ராம் ஜி) சட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005 ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் இருந்து புதிய கட்டமைப்புக்கு மாறுவது இடையூறுகளின்றி இருக்கும். ஜூன் 30ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடந்து வரும் பணிகள் அனைத்தும் புதிய திட்ட கட்டமைப்புக்கு தடையின்றி கொண்டு செல்லப்படும்.

புதிய கிராமின் ரோஸ்கர் உத்தரவாத அட்டைகள் தரப்படும் வரை தற்போதுள்ள இ-கேஒய்சி சரி பார்க்கப்பட்ட மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி சட்ட அட்டைகள் செல்லுபடியாகும். நிலுவையில் உள்ள இ-கேஒய்சி காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படாது. மேலும் பணி அட்டை இல்லாதவர்களுக்கான பதிவு கிராம பஞ்சாயத்து அளவில் தொடரும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து ஊதியம், குறைகளை சரி செய்தல், ஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் இடைநிலை விதிகள் தொடர்பான வரைவு விதிகள் விரைவில் வௌியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபி ஜி ராம் ஜி திட்ட பயன்கள்
விபி ஜி ராம் ஜி திட்டத்தில் தற்போதுள்ள 100 நாள்களுக்கு பதிலாக, ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 125 நாள்கள் கட்டாய வேலை உறுதி அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வேலை தரப்படாவிட்டால், தொழிலாளர்களுக்கு வேலையில்லா உதவித்தொகை அளிக்கப்படும். தொழிலாளர்களுக்கான ஊதியம் நேரடியாக தொழிலாளர்களின் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளுக்கு வாராந்திர அடிப்படையில் அல்லது 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவும் புதிய சட்டத்தில் இடமுண்டு.

Related Stories: