புதுடெல்லி: பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதலுடன் கூடிய எட்டு கட்டளைகள் கொண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து அதில் கூறப்பட்டுள்ளதில்,‘‘ ஜாமீன் மனுக்களை விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றங்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். ஜாமீன் மனுக்களை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கட்டாயம் பட்டியலிட வேண்டும். விசாரணைக்கு வராத மனுக்கள் தானாகவே அடுத்த பட்டியலுக்குச் செல்ல வேண்டும். அதேப்போன்று வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு முன்பே நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜாமீன் மனுக்களின் நகல்களை முன்கூட்டியே அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.
தடய அறிவியல் ஆய்வக அறிக்கைகள் தாமதமாவதால் ஜாமீன் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதைச் சரிசெய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும். மேலும் புலனாய்வு அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் ஜாமீன் பெற வழிவகுத்துவிடும் என்றும், எனவே அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் எந்த விதத்திலும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
