புதுடெல்லி : கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் ராஜஸ்தான் சீகர் பகுதியில் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. கையால் எழுதப்பட்ட 281 கேள்விகள் அடங்கிய மாதிரி நீட் வினாத்தாள் பரவியதாக தகவல் வெளியானது.
அதில் 135 வினாக்கள் நீட் தேர்வில் இடம்பெற்றிருந்த வினாத்தாளுடன் ஒத்துப்போனது அம்பலமானது. உயிரியல் பிரிவில் இருந்து 90 கேள்விகளும், வேதியல் பிரிவில் இருந்து 45 கேள்விகளும் மாதிரி வினாத்தாளில் காணப்பட்டது. பல கேள்விகள் நீட் தேர்வு வினாத்தாளிலும் மாதிரி வினாத்தாளிலும் ஒரே வரிசை எண்ணில் இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
மேலும் நீட் தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களில் இந்த மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்தாலே 600 மதிப்பெண்களை பெற முடியும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு குழு விசாரணை தொடங்கியுள்ளது. நீட் தேர்வு நடந்து முடித்து 4 நாட்களுக்கு பிறகே முறைகேடு பற்றி தகவல் கிடைத்ததாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
சீகர் நகரில் கையால் எழுதப்பட்ட வினாத்தாள் ரூ.20,000 முதல் ரூ.2 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில் மாதிரி வினாத்தாள் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுரியில் பயிலும் மருத்துவ மாணவர் மூலம் வெளிவந்தாகவும் பிறகு மாணவர்கள் தங்கும் விடுதிகள், பயிற்சி மையங்களில் வேகமாக பரவியதாக விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பரவியதில் இது தொடர்பாக சில தொலைபேசி உரையாடல்கள் கிடைத்திருப்பதாக சிறப்பு விசாரனை குழு கூறியுள்ளார். நேரடியாக விநியோகிக்கப்பட்டதா? என்பது குறித்து தீவிரமாக சிறப்பு விசாரணை குழு ஆராந்து வருகின்றனர்.
