தொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி 75 சதவீத அரசு பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி

பொள்ளாச்சி, பிப். 26: அரசு போக்குவரத்துக்கழக தொழிளார்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பொள்ளாச்சி பகுதியில் நேற்று 75சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். தமிழக அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு அமைப்பினர், 14வது ஊதிய ஒப்பந்தத்தை துவங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களின் பண பலன்கள் மற்றும் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கை துவங்கினர்.

இதில், பொள்ளாச்சி பகுதியில் நேற்று காலை முதல் போக்குவரத்துக்கழக தொழிலாளர் பெரும்பாலானோர் ஸ்டிரைக்கில் ஈடுபட தொடங்கினர். இதனால் சுமார் 75 சதவீத அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.  இதில், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு வேலை நிமித்தமாக செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி  மாணவர்கள் அவதிப்பட்டனர். ஆனால், தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இதனால், நேற்று காலை முதலே தனியார் பஸ்சில் பயணம் செய்வதற்காக பயணிகள் பலரும் பஸ் நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்தனர். இருப்பினும், அடுத்தடுத்து வந்த தனியார் பஸ்களில், பயணிகள் போட்டிபோட்டு இடம் பிடித்தனர்.

அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்ததுடன், சில பயணிகள் தங்கள் பணிக்கு விரைந்து செல்ல முடியாமல் திரும்பி சென்றனர்.  மேலும் ஆனைமலை, கோட்டூர், கிணத்துக்கடவு, நெகமம், உடுமலை மற்றும் வால்பாறை மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ் இயக்கம் மிகவும் குறைவாக  இருந்தது. இதனால் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் மட்டும் இயக்கப்படும் சில தனியார் மினி பஸ்களில், பயணிகளை ஏற்றி சென்ற நிலை ஏற்பட்டது. தனியார் பஸ்கள் இயக்கம் மட்டும் இருந்தாலும், போதிய பஸ்வசதி இல்லாமல் பயணிகள் அவதியிடைந்தனர்.

பொள்ளாச்சியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் பெரும்பாலும் இயங்காததால், பஸ்நிலையத்தின் பெரும்பகுதி அரசு பஸ்சின்றி வெறிச்சோடியது. அரசு போக்குவரத்து தொழிற்சாங்கத்தினர் திடீர் என போராட்டம் நடத்தினால்,அதை தடுக்க தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல் கோவைரோடு மற்றும் கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories:

>