திருப்பூர் : திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் சதத்தை எட்டி உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், சிறுவர்கள் வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
திருப்பூர் அணை மேடு பகுதியில் உள்ள தடுப்பணையில் தற்போது தேங்கியுள்ள தண்ணீரில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் காலை முதல் மாலை வரை உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.
இது மட்டுமல்லாத தாராபுரம் சாலை பொல்லிகாளிபாளையம், அலகு மலையில் உள்ள பிஏபி வாய்க்கால்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக தண்ணீரில் விளையாடி வருகின்றனர்.
விடுமுறை கொண்டாட்டமாகப் பார்க்கப்பட்டாலும், இது ஆபத்தானது எனவும் எச்சரிக்கின்றனர். தடுப்பணையின் ஆழம் தெரியாத பகுதிகளுக்குச் செல்வதும், பாசி படிந்த வழுக்கும் பாறைகளில் ஏறி குதிப்பதும், வாய்க்கால்களில் திடீரென தண்ணீரில் திறக்கப்படுவதும் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “தடுப்பணைகளில் தேங்கியுள்ள தண்ணீர் பார்ப்பதற்கு அமைதியாகத் தெரிந்தாலும், அடியில் சுழல்கள் அல்லது சேறு நிறைந்த பகுதிகள் இருக்கலாம். வாய்க்கால்களில் முன் அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்படலாம்.
இவைகளில், போதிய பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது பெரியவர்களின் கண்காணிப்போ இன்றி சிறுவர்கள் இது போன்ற ஆபத்தான பகுதிகளில் குளிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்குத் தனியாக அனுப்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஆபத்தான நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகளை வைப்பதோடு, கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
