போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு உடுமலை-மூணாறு சாலையை சீரமைக்க கோரிக்கை

உடுமலை : உடுமலை-மூணாறு சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர், மறையூர் மற்றும் மூணாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக தமிழக,கேரள அரசு பஸ்களும், சுற்றுலா வாகனங்களும், சரக்கு வாகனங்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பயணிக்கின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டி செல்கின்ற இந்த சாலை 16 கி.மீ தொலைவிற்கு தமிழக எல்லையான சின்னார் சோதனைச்சாவடி வரை மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. ஏழுமலையான் கோவில், கோடந்தூர் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த வழித்தடத்தில் செல்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் கேரள மாநில எல்லைக்கு பிறகு சாலை வசதி நன்றாக உள்ளது. தமிழக எல்லைக்குள் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு இறங்கினால் மீண்டும் சாலையில் ஏறமுடியாத அளவிற்கு சாலைகள் மிக உயரமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

மலை வழிப்பாதை என்பதால் மிகவும் குறுகலான இந்த சாலையில் வார விடுமுறை நாளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கேரள மாநிலத்தை போல தமிழகத்திலும் மலை வழிப்பாதையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: